
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்! -கோவி.லெனின்
இந்தியர்கள் அவ்வளவு சட்டெனப் பெருமைப்பட்டுவிட முடியாது. ஆயிரம் பவுர்ணமிகள் கடக்கும் வரை காத்திருந்தே ஆஸ்கர் விருதின் வெற்றிக் களிப்பை நாம் அனுபவிக்க முடிந்துள்ளது. இரண்டு கைகளிலும் இரண்டு ஆஸ்கர் விருதினைப் பிடித்தபடி, “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் கொடாக் ஸ்டுடியோவில் ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சொன்னதில் எல்லோருக்கும் பெருமைதான். ஆனால், அந்தப் பெருமைக்காக இந்தியத் திரையுலகம் ஆயிரம் பவுர்ணமிகள் காத்திருக்க வேண்டியிருந்ததையும் மறந்துவிடமுடியாது.
80 வயது நிறைவடைந்து 81வது வயதில் அடியெடுத்து வைப்பவர்களை “ஆயிரம் பிறை கண்டவர்” என்கிறது தமிழ் மரபு. ஆயிரம் பிறைகளைக் கண்டிருப்பார் என்றால், ஆயிரம் பவுர்ணமிகளையும் அவர் கடந்திருப்பார் என்றுதானே அர்த்தம்! 81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில்தான் இந்தியர்கள் இந்த சாதனையை எட்டிப்பிடிக்க முடிந்திருக்கிறது எனும்போது கடந்த 80 விழாக்களில் நாம் புறக்கணிக்கப்பட்டு வந்ததையும் நினைவுகூர வேண்டியிருக்கிறது. ஆயிரம் பவுணர்மிகளை கடக்க வேண்டுமென்றால், ஆயிரம் அமாவாசைகளையும் கடந்துதானே வரவேண்டும்! அத்தனை அமாவாசை இருட்டையும் ஒருசேர விரட்டிவிட்டது ஏ.ஆர்.ரகுமானின் கையில் ஒரே நேரத்தில் ஜொலித்த இரண்டு ஆஸ்கர் பவுர்ணமிகள்.
வெற்றிச் சிகரத்தில் ஏறிவிட்ட ஒருவரை வாழ்த்துவது நல்ல மரபு என்றாலும் அது “கூட்டத்தோடு கோவிந்தா” கதையாக இருந்துவிடக்கூடாது. ஏ.ஆர்.ரகுமானின் மகுடத்தில் மின்னும் புதிய இரண்டு வைரங்கள் எப்படி வந்தன என ஆழத் தோண்டினால் அதில் இந்திய சினிமா இசையின் வரலாறு வெளிப்படும். ரகுமானின் கையில் மின்னும் இரண்டு பவுர்ணமிகளுக்குள் ஆயிரம் பவுர்ணமிகளின் வெளிச்சம் புதைந்திருக்கும் உண்மையையும் அறிந்து கொள்ள முடியும். வடக்கே நவ்ஷாத், எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த்-பியாரேலால், கல்யாண்ஜி-ஆனந்த்ஜி தெற்கே ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்ட இசை ஜாம்பவான்கள் உருவாக்கிய திரையிசைப் படிக்கட்டு வழியாகத்தான் ஏ.ஆர்.ரகுமான் இன்றைய உயரத்திற்குச் சென்றிருக்கிறார் என்று சொன்னால் அதை ரகுமானே மறுக்க மாட்டார்.
படம் பார்க்கின்ற ஒவ்வொரு ரசிகனின் நெஞ்சத்துக்குள்ளும் ஊடுருவி காலகாலத்திற்கும் இன்ப இம்சைக்குள்ளாக்கும் சக்தி திரைப்பாடல்களுக்கு உண்டு. மேலே குறிப்பிட்ட இசை ஜாம்பவான்களின் பல பாடல்கள் இன்றும் பல கோடி இந்தியர்களின் உயிர்த்துடிப்போடு கலந்திருக்கிறது. கடல் கடந்த நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் இந்தியத் திரை இசைப்பாடல்கள் விட்டுவைப்பதில்லை. இந்துஸ்தானி, கர்நாடிக், வடஇந்திய-தென்னிந்திய நாட்டுப்புற இசை இவற்றை அனைத்துத் தரப்பினருக்கும் பொதுமைப்படுத்தியதிலும், வெளிநாட்டு இசையையும் வெளிநாட்டு இசைக்கருவிகளையும் நமது மக்களுக்கேற்ற வகையில் பிரபலப்படுத்தியதிலும் திரை இசைக்கே முதன்மையான இடம் உண்டு.
மச்சானப் பார்த்தீங்களா என “ஒத்தை அடி”யின் பின்னணியில் இளையராஜா தந்த கிராமிய இசையாகட்டும், என் இனிய பொன்நிலாவே என்று மேற்கத்திய பாணியை கலந்து வழங்கிய பாடலாகட்டும், ரசிகர்களின் இதயத்தில் நிரந்தர சிம்மாசனமிட்டிருக்கின்றன. இத்தகைய ஜாம்பவான்களின் வரிசையில் தனது முதல் தமிழ் படத்தின் வாயிலாக இந்திய ரசிகர்களையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் ஏ.ஆர்.ரகுமான்.
இந்திய திரை இசை மரபின் நுணுக்கங்களை உள்வாங்கிக்கொண்டு அதனை உலகத் தரத்திற்கு உயர்த்தியதே ரகுமானின் இன்றைய சாதனைகளுக்கு அடித்தளமாகும். புதிய புதிய தொழில்நுட்பங்களும் விரிவான வியாபாரத்தளமும் மரபார்ந்த இசையை சிதைத்துவிடும் என்றே பெரும்பாலான இசையமைப்பாளர்கள் தயக்கம் காட்டி வந்தார்கள். இளம் கன்று பயமறியாது என்பதுபோல புதிய பாய்ச்சலுடன் தனது முதல் படத்திலிருந்து இன்றுவரை தொழில்நுட்பத்தையும் வியாபாரத்தளத்தையும் சரியாகக் கையாண்டு வெற்றிச் சிகரங்களில் ஏறிக்கொண்டே இருக்கிறார் ரகுமான்.
ரோஜா படத்தின் முதல் பாடலான சின்னச் சின்ன ஆசையின் தொடக்கத்தில் வரும் இசையும் அதன் தொழிநுட்பமும் இந்திய திரையிசை ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. இவர் திறமையானவர், வித்தியாசமானவர், மாயாஜாலக்காரர் என ரசிகர்கள் அந்த முதல் பாடலிலேயே தங்கள் இதயத்தை ரகுமானிடம் பறிகொடுத்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் தனது வித்தியாசமான திறமையையும் தொழில்நுட்ப மாயாஜாலத்தையும் ஒவ்வொரு படத்திலும் ரகுமான் நிரூபித்துக்கொண்டே இருந்தார். அவரது இசையின் அடித்தளமாக இருந்தது தமிழ் மண்ணின் நாட்டுப்புற இசையன்று. இந்துஸ்தானி இசையே அவரது திரையிசைக்கு அடிப்படை என்பதையும் கஜல் உள்ளிட்ட இசை வடிவங்களையும் இந்துஸ்தானி இசைக் கருவிகளையும் அவர் சிறந்த முறையில் கையாண்டதையும் அவரது பாடல்களால் ஈர்க்கப்படவர்கள் அறிவார்கள். அதனால், தமிழ்த்திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்த பாடல்களும்கூட மொழிமாற்றம் பெற்று இந்திக்குச் சென்று, நேரடி இந்தி திரைப்படப்பாடல்களை விஞ்சக்கூடிய அளவில் வெற்றி பெற்றன. ரோஜாவிலேயே இந்த வெற்றி தொடங்கிவிட்டது. முதல் படத்திலேயே தேசிய விருது பெறக்கூடிய தகுதிமிக்க வெற்றியாளரானார் ரகுமான்.
உலகமயமாக்கலின் விளைவாக இந்திய இசையின் வணிகத்தளம் விரிவடையத் தொடங்கிய காலகட்டமே ரகுமானின் அறிமுகப்படலம் நடந்த தருணமாகும். ரங்கீலா உள்ளிட்ட நேரடி இந்திப்படங்களுக்கு அவர் இசையமைத்த விதமும், வந்தேமாதரத்திற்கு புதிய இசைவடிவம் கொடுத்து அதனை இந்தியாவின் இரண்டாவது தேசியகீதமாக்கிய திறமையும் அவரது புகழை உயர்த்தின. ரகுமானே நவீன இந்திய இசையின் அடையாளம் என உலக நாடுகளால் பார்க்கப்பட்டது. இந்தியர்கள் உலகெங்கும் பரவ, இந்திய இசையின் வணிகத்தளம் விரிவடைய, பன்னாட்டு நிறுவனங்கள் ரகுமானை அண்டின. மிகக் கவனமாக அவற்றைக் கையாண்டதுதான் ரகுமானின் பெரும் வெற்றி.
தன்னைத் தேடி பல வாய்ப்புகள் வந்தபோதும் சரியானதாகவும் தனது விருப்பத்திற்குரியதாகவும் இருக்கக்கூடிய இசையமைப்புகளுக்கு மட்டுமே அவர் இசைவளித்தார். திரைப்படங்களாக இருந்தாலும் இசைத் தொகுப்பாக இருந்தாலும் மேடை நிகழ்ச்சியாக இருந்தாலும் ரகுமான் மிகவும் கவனத்துடனேயே தேர்வு செய்தார். ஒப்புக்கொண்டுவிட்டால் அதன் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது ரகுமானின் இயல்பு. எப்போதும் புதியதாகவும், பழைய பாணியைத் தகர்ப்பதாகவும், ஆழ ஊடுருவக்கூடியதாகவும், பரிசோதனை முயற்சியாகவும் அமைவதே ரகுமானின் இசை என்கிறார்கள் இசைத்துறையினர். ரகுமானோ இது தனக்கு கடவுள் அளித்த வரம் என்பதற்கு மேல் வேறெதுவும் பேசுவதில்லை. ஆனால், அவரது இசை உலகெங்கும் பேசப்படுகிறது.
இந்தியத் திரை இசை மரபின் தொடர்ச்சியான ஏ.ஆர்.ரகுமான், தான் வாழும் காலத்தை மிகச் சரியாக உணர்ந்து, சரியான இசையை வழங்குபவர். அவரது தாக்கம் இல்லாமல் இன்றைய புதிய இசையமைப்பாளர்கள் யாருமில்லை. 4 தேசிய விருதுகள், 12 ஸ்க்ரீன் விருதுகள், 21 ஃபிலிம்ஃபேர் விருதுகள், பத்மஸ்ரீ பட்டம் என இந்தியப் பெருமைகள் பலவற்றைப் பெற்ற ரகுமான், ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தின் மூலமாக கோல்டன் குளோப், ஃபாப்டா போன்ற உயர்ந்த விருதுகளைப் பெற்று, திரையிசைக்கான எவரெஸ்ட் விருதான ஆஸ்கரையும் பெற்றுவிட்டார்.
அவருடைய திரை இசைப்பயணம் நெடுகிலும் பெரும் முதலாளித்துவ-பன்னாட்டு -உலகமயத்தன்மைகள் தவிர்க்க முடியாதவனவாகிவிட்டன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயக்குநர் டேனி பேர்ல் எடுத்த ஆங்கிலப் படம் என்பதால்தான் ஸ்லம்டாக் மில்லியனர், 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 8 விருதுகளைப் பெற்றுள்ளது. இல்லையென்றால், இந்த மாபெரும் வெற்றி சாத்தியமாகியிருக்காது.
ஆஸ்கரின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் இந்திய இயக்குநர் சத்யஜித்ரே. குறிப்பிட்ட படத்திற்காக அவருக்கு விருது வழங்க ஆஸ்கர் குழுவினர் தயாராக இல்லை. டேனி பேர்ல் வெள்ளைத்தோல்காரர் என்பதால் அவரைச் சார்ந்து பணியாற்றியதன் வாயிலாக இந்தியர்களின் ஆஸ்கர் கனவு நிறைவேறியுள்ளது. ஒலி சேர்ப்பிற்காக ரசூல் புக்குட்டியும், ரகுமான் இசையில் ஜெய் ஹோ பாடலை எழுதிய இந்திப் பாடலாசிரியர் குல்ஜாரும் ஆஸ்கர் விருது பெற்றுள்ளனர். உலகத்தரமிக்க கலைஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதும், அவர்களை அங்கீகரிக்க வெள்ளைத் தோல்காரர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையுமே இந்த விருதுகள் நிரூபிக்கின்றன.
இத்தகைய இனரீதியான தடைகளை மீறி ஒருவர் விருது பெறும்போது, அந்த விருதுக்குப் பெருமை சேர்கிறது. அதிலும் இரண்டு விருதுகளை ஒரே நேரத்தில் ரகுமான் பெற்றிருப்பது இன ஒடுக்கல் மிகுந்த ஆஸ்கருக்குள் இந்தியர் நிகழ்த்தியிருக்கும் கின்னஸ் சாதனையாகும். இதனை கடுமையான உழைப்பும், தொடர்ச்சியான தேடலும், இடைவிடாத போராட்டமுமே சாத்தியமாக்கும்.
“இசையை அன்பின் வடிவமாக பார்க்கிறேன். அதனை மனித சமுதாயத்திற்கு செய்யும் சேவையாகக் கருதுகிறேன். மகிழ்ச்சியை சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனுபவமாகவே இசையைக் கையாள்கிறேன்” என்கிறார் ரகுமான். அதனால்தான் அவருக்கு கிடைத்த இரட்டை ஆஸ்கரை தங்களுக்கு கிடைத்ததாக நினைத்து மகிழ்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.
உலகத் திரை இசையின் உச்சத்தை தொட்டுவிட்டார் ரகுமான். கிளைகள் எங்கெங்கோ பரவினாலும் வேர் என்பது சொந்த மண்ணில்தான். மேற்கத்திய பாணி இசைக்காகத்தான் ரகுமான் இப்போது உச்சத்தைத் தொட்டிருக்கிறார். தமிழிசையில் ரகுமான் இதுவரை ஆழமாகச் செல்வதற்கான வாய்ப்பு அமையவில்லை. இந்த மண்ணின் இசை மரபுடனான ஓர் இசைத்தொகுப்பு அவரிடமிருந்து வெளிப்படவில்லை. பாரம்பரியமிக்க தமிழின் இசை மரபை நவீனப்படுத்தும் பணிக்குத் திரும்புவதற்கு ரகுமானுக்கு இனி நேரமும் வாய்ப்பும் இருக்குமா?
-கோவி.லெனின்