15 பிப்ரவரி, 2009

நான் கடவுள் - காவியும் காசியும் -ஹரன் பிரசன்னா

நான் கடவுள் - காவியும் காசியும் -ஹரன் பிரசன்னா'நான் கடவுள்' படம் தமிழ்த் திரையுலகம் இதுவரையில் காணாத காட்சிகளைக் காண்பிக்கிறது. கதையின் நிகழ்களமாக எடுத்துக்கொள்ளப்படும் பிச்சைக்காரர்களின் உலகம் இதுவரை யாரும் திரையில் காணாதது. அதற்காக பாலா மெனக்கெட்டிருக்கும் விதம் அசாத்தியமானது. ஒவ்வொரு பிச்சைக்காரரையும் தேர்வுசெய்து நடிக்க வைத்திருப்பதற்கே நிறைய நாள்கள் தேவைப்பட்டிருக்கும். ஏழாவது உலகம் நாவலை படித்திருக்காத பலருக்கு, இத்திரைப்படம் பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும், பயத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்கும் என்பது உறுதி. அதேபோல் தமிழ்த்திரையுலம் காணாத இன்னொரு விஷயம், சன்யாசிகளின் வாழ்க்கை. ஹிந்துமதம் தொடர்பான எந்த ஒரு காட்சியையும் விமர்சனத்தோடும், கேலியோடும், கிண்டலோடும் மட்டுமே எடுக்கும் தைரியம் கொண்ட கமல்ஹாசன், பாலசந்தர் வகையறாக்களுக்கு மத்தியில், இந்து மதச் சார்பான குரல்கள் - அது நியாயமான ஒன்றாக இருந்தாலும் கூட - எங்கேயும் வெளிவந்துவிடக்கூடாது என்ற கருத்தியல்கள் கொண்ட சிற்றிதழ்ச் சூழலில், உள்ளதை உள்ளபடி, அதுவும் அதை ஒரு மாபெரும் மக்கள் ஊடகத்தில் காண்பிக்கும் தைரியம் பாலாவிற்கு இருந்திருக்கிறது. படம் முழுக்க காவி நிறம். இந்த ஒரு காரணத்தினாலும், அகோரி தொடர்ந்து சமிஸ்கிருத வசனங்கள் பேசியபடியே வருவதானாலும் இது ஹிந்துத்துவ படம் என்கிற கருத்து ஒலிக்கிறது. ஆனால் உண்மையில் இத்திரைப்படம் இறை நம்பிக்கைக் கொண்டவர்களின் கருத்தைவிட அதிகமாக, இறையால் கைவிடப்பட்டதாகக் கருதிக்கொள்ளும் விளிம்பு நிலை மக்களின் எதிர்க்குரலைப் பதிவு செய்துள்ளதாகவே நான் காண்கிறேன். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், எந்த ஒரு மதத்தின் மீதும் கரிசனம் காட்டப்படவில்லை என்பதே. இஸ்லாம், கிறித்துவம் என்று வரும்போது கருணை பொங்கும் பகுத்தறிவும், ஹிந்துமதம் என்று வரும்போது அறிவுபூர்வமான பகுத்தறிவும் கொள்ளும் கலைஞர்களுக்கு இத்திரைப்படத்தை சமர்ப்பிக்கலாம்.பிதாமகன் திரைப்படம் வந்தபோது, பாலாவிற்கு மனப்பிறழ்ச்சி என்கிற வகையிலெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. (இத்தகைய திரைப்படங்கள் வருவதற்கு ஒரு இயக்குநரின் மனப்பிறழ்ச்சிதான் காரணம் என்றால், அந்த மனப்பிறழ்ச்சி நிறைய இயக்குநர்களுக்கு வரட்டும்.) அதே விமர்சனங்கள் இத்திரைப்படத்திலும் தொடரக்கூடும். பாலாவின் கதாநாயகர்கள் அசாதரணர்களாகவே வருவது, இவ்விமர்சனத்தின் பின்னாலிருக்கும் முக்கியமான காரணம். பிதாமகனில் விக்ரமின் பாத்திரம் ஏன் அப்படி அசாதரணனாக இருக்கவேண்டும் என்பதற்கு எவ்விதக் காரணமும் சரியாகச் சொல்லப்படவில்லை. இப்படத்திலும் அதுவே தொடர்கிறது. ருத்ரன் அகோரியாக வாழ்கிறான். அவனை யாரும் நெருங்கமுடியாது. அவன் யாரையும் அடித்து வீழ்த்தி வெற்றிகொண்டு விடுவான். இவற்றையெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அதன் பின்னர்தான் நம்மால் இப்படத்தைப் பார்க்கவே முடியும். தனது முந்தைய படங்களின் வழியே, பாலா இதற்கு நம்மைப் பழக்கிவிட்டார் என்பதால் இதனை அப்படி ஏற்றுக்கொண்டுவிட முடிகிறது. ஆனால், இதே போன்ற பாத்திரங்களின் வழியே தொடர்ந்து படமெடுப்பதைப் பற்றி பாலா யோசிக்கத் தொடங்கவேண்டும். மிக வித்தியாசமான ஒரு திரைப்படம், மசாலா திரைப்படம்தான் என்கிற வட்டத்துக்குள் சிக்குவது இது போன்ற சித்திரிப்புகளாலேயே.பிதாமகனில் செய்த இன்னொரு தவறை பாலா மீண்டும் செய்திருக்கிறார். காவல்நிலையத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகள், படத்திற்குத் தேவையில்லாதவை மட்டுமல்ல. ஒருவித தவம் போலச் செல்லும் படத்தின் அமைதியை வெகுவாகக் குலைக்கின்றன.இத்திரைப்படத்தில் பாலாவின் வெற்றி, விளிம்பு நிலை மனிதர்களை அவர் காட்சிப்படுத்தியிருப்பதில் இருகிறது. ஒருவகையில் இது ஜெயமோகனின் வெற்றி. பிச்சைக்காரர்கள் சதா அழுதுகொண்டே இருப்பதில்லை. அவர்களின் உலகம் கேலி, கிண்டல், காதல் உள்ளிட்ட எல்லாவற்றினாலும் ஆனது. பிச்சையெடுக்கும் சிறுவன் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. மிகக் கடுமையான திரைக்கதையை வசனத்தின் மூலம் சமனாக்கியிறார் பாலா. ஜெயமோகனின் நக்கல் வசனங்கள் திரைப்படம் முழுவதும் வியாபித்துக் கிடக்கின்றன. இவையே படம் பார்ப்பவர்களை படத்தோடு ஒன்றச் செய்கின்றன. இல்லையென்றால் இத்திரைப்படம் திரைப்பட விழாவிற்கு மட்டுமான திரைப்படமாகியிருக்கும்.ருத்ரனாக நடித்திருக்கும் ஆர்யாவிற்கு வேலை அதிகமில்லை. புஜங்களைத் தூக்கியபடி, முடியில் முகத்தை மறைத்துக்கொண்டு, சதா கஞ்சா போதையில் கண்களைச் சுழலபட்டி நடக்கவேண்டும். அவரது வேலையை மிக நன்றாகவே செய்திருக்கிறார். இவ்வேடத்தில் அஜித்தை நினைத்துப் பார்க்கும்போதே குலை நடுங்கியது. பாலாவிற்கு என்னதான் தன்னம்பிக்கை அதிகம் என்றாலும், அஜித்தை முதலில் ஒப்பந்தம் செய்ததெல்லாம் கொஞ்சம் ஓவர். பூஜாவின் நடிப்பு அசத்தல். ஒரு தேசிய விருதுக்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார். பூஜாவின் உழைப்பிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கவேண்டும்.திருநங்கைகள் தொடர்ந்து தமிழ்த்திரைப்படங்களில் காட்டப்பட்டு வரும் விதம் குறித்து குமுறியவர்களுக்கு இதம் தரும் வகையில், இத்திரைப்படத்தில் திருநங்கையின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கையாக வருபவர், மற்ற எந்தக் கதாபாத்திரம் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறார். தமிழில் இது ஒரு சாதனை. அவர்கள் மேல் தேவையற்ற காட்சிரீதியிலான கிண்டல்கள் வைக்கப்படவில்லை. திருநங்கைகளைப் பொதுமைப்படுத்திச் சித்திரிக்கும் அவலம் எல்லாம் இல்லாமல், அப்பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் பாலாவைப் பாராட்டவேண்டும். அதோடு, இதுபோன்ற திரைப்படங்களில் வரும் கதாநாயகி ஒரு பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவார். அது அவரது எஜமானாலேயோ அல்லது ஒரு பொதுஜனத்தாலேயோ அல்லது இருவருமாலேயோ நிகழும். இது போன்ற க்ளிஷே காட்சிகள் இப்படத்தில அறவே தவிர்க்கப்பட்டிருப்பது இன்னொரு முக்கிய விஷயம். அதன் காரணம், பாலா பூஜாவை ஒரு நடிகையாகப் பார்க்காமல், ஒரு பிச்சைக்காரப் பெண்ணாக மட்டும் பார்த்திருப்பதுதான் எனலாம். பெரும்பாலான தமிழ்ப்படங்களில் இது நிகழ்வதே இல்லை என்பதே இத்தகைய அபத்தக் காட்சிகள் இடம்பெறுவதற்கான காரணம்.ருத்ரனின் அம்மாவாக நடிக்கும் பெண்மணிக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். ஒரு சிக்கலான மனநிலையைச் சொல்லவேண்டிய அவருக்கு அழமட்டுமே தெரிகிறது. இதுபோன்ற காட்சிகளில் ஒரு புதுமுகத்தை நடிக்க வைப்பதே நல்லது. கவிஞர் விக்கிரமாதித்யன் ஆச்சரியமான சந்தோஷம்.எல்லாவற்றையும்விட முக்கியமானது படத்தின் இசை. இத்திரைப்படத்தின் உண்மையான ஹீரோ இளையராஜாதான். குணா, மகாநதி, ஹே ராம், விருமாண்டிக்கு அடுத்து வந்திருக்கும் மிகச்சிறந்த இசைக்கோவை உள்ள திரைப்படம் இதுவே. நெஞ்சை அதிர வைக்கும் இசை, மனதை உருக வைக்கும் இசை, காட்சியின் வீர்யத்தை அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் இசை என இளையராஜா மாறாத உருவங்களில்லை. இசையில் நெருப்பு எரிகிறது. நதி ஓடுகிறது. சங்கு ஒலி சங்கை அறுக்கிறது. ஹே ராம் திரைப்படத்திற்கே இளையராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இத்திரைப்படத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு என்றுதான் நினைக்கிறேன். பாடல்களைப் பொருத்தவரை, ஓம் சிவோகம் பாடல் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மற்ற பாடல்கள் எல்லாமே சுமார் ரகம். மது பாலகிருஷ்ணனின் மயக்கும் குரலில் ஒரு பாடல் வருகிறது. ஆனால் அது மனதில் தங்கவே இல்லை.ஒளிப்பதிவு வெகு அழகு. காசி நகரக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் காமராவின் வேகம் அசர வைக்கிறது.பெரும்பாலும் வித்தியாசம் மற்றும் பிரம்மாண்டம் ஒருங்கே இணைந்த தமிழ்த் திரைப்படங்களை (ஹே ராம், குருதிப்புனல், மகாநதி, குணா போன்றவை) கமல்ஹாசனே தந்திருக்கிறார். அதை இம்முறை பாலா தந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. விருமாண்டிக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் இல்லாத நிலையில், நான் கடவுள் அக்குறையைத் தீர்க்கிறது. கமல் செய்யும் நுண்ணரசியல் எதுவும் இல்லாமல், பின்னோக்கங்கள் எதுவும் இல்லாத தெளிவான படமாகவும் 'நான் கடவுள்' இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. ஹே ராம் போல, இது தமிழ்த் திரையுலகின் மைல்கல்லா என்றால் கிடையாது. ஆனால் தமிழ்த் திரையுலகின் முக்கியமான படங்களில் இது ஒன்று. நந்தாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சேது, பிதாமகன், நான் கடவுள் என பாலாவின் கிராஃப் உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. இத்திரைப்படம் இதுவரை வந்திருக்கும் பாலாவின் படங்களில் சிறந்த படம். வரும் படங்களில், இன்னும் அதிக உயரத்தை பாலா தொடுவார் என உறுதியாக நம்பலாம்.இட்லிவடைக்கு ஸ்பெஷலாக எழுதி கொடுத்த ஹரன் பிரசன்னாவிற்கு நன்றி

கருத்துகள் இல்லை: