ெள்ளை மாளிகை புல்வெளியில் நின்று கடந்த புதன்கிழமை மதியம் ஒபாமா பேசினார். ""உணவு- குடிநீர் இன்றி வாழும் தமிழ் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவி, சண்டை நிறுத்தம், நிரந்தர அரசியல் தீர்வு ஆகியவற்றை அவரது உரை வலியுறுத்தியது.
உண்மையா, இல்லையா என்பது தெரியாது. வாஷிங்டன் தமிழ் நண்பர் ஒருவர் ஒபாமா நிர்வாகத் துடன் தொடர்பில் இருக்கிறவர். அவர் சொல்கிறபடி, உரைக்கு முன் நடந்த ஆலோசனையின்போது ராஜபக்சே நிர்வாகம் மட்டில் கடும் அதிருப்தியும் கோபமும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஒபாமா. ""ராணுவமும் விடுதலைப்புலிகளும் சண்டையிட்டு அழியட்டும், எக்கேடும் கெட்டுப் போகட்டும். ஆனால் அப்பாவி மக்களை உலக மனிதாபிமான அமைப்புகள் சந்திப்பதை அனுமதிக்க முடியாது என்று சொல்ல ராஜபக்சே யார்? எல்லாவற்றிற்கும் சில எல்லைகள் உண்டு என்பதை அவருக்குச் சொல்லுங்கள்'' என உயர் அதிகாரிகளிடம் வெடித்திருக்கிறார்.கடந்த மாதம் நான் படித்த புத்தகங்களில் இரண்டு ஒபாமா அவர்கள் எழுதியவை. ""நம்பிக்கையின் முரட்டுத் துணிவு'' மற்றும் ""எனது தந்தையின் காற்தடப் பாதையில்... உலக அளவில் 25 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்து வெற்றிப் பதிவு செய்துவிட்ட புத்தகங்கள்.
"நம்பிக்கையின் முரட்டுத் துணிவு' புத்தகத்தில், தன்னை வழிநடத்தும் ஒழுக்க நெறிகளில் ஒன்றாக ஒபாமா "ஊம்ல்ஹற்ட்ஹ்'-யை பலமுறை குறிப்பிட்டிருந்தார். தமிழில் அதை புரிந்து கொள்ள நமக்கு வள்ளலார் போதும். வாடிய பயிரை கண்டு வாடும் உள்ளம், ஈடின் மானிகளாய், ஏழைகளாய் இருப்போரை கண்டு இரங்கும் உள்ளம், வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்வோரைக் கண்டு பதைக்கும் மனம்... இன்னும் அணுக்கமாக "ஊம்ல்ஹற்ட்ஹ்'-யை கூறுவதானால்... ஒரு அரவாணியை, திருநங்கையை புரிந்துகொள்ள அவர்களது அனுபவத்தை உள்வாங்கி உணர்கிற ஆத்தும மேன்மை எனக்கு வேண்டும், இன்றைய ஈழத்தமிழனை புரிந்துகொள்ள நான் ஈழத்தமிழனாக இருந்து பார்க்க வேண்டும்.
தூக்கியபோது பிள்ளையாகவும், கிடத்திய போது பிணமாகவும் கிடத்திய தந்தையாய், சிங்களம் கொன்ற பிள்ளையை மடியிலும் கைப்பிள்ளையை மார்பிலுமாய் அணைத்து துடிக்கிற தாயாய், இயற்கைத் தேவைகளுக்குக்கூட வெளியே வரமுடியாமல் பதுங்கு குழிக்குள் உயிர் பதைத்துக் கிடக்கும் குடும்பமாய், ஒரு குவளை தவிட்டுக் கஞ்சிக்காய் ஒரு மணிநேரம் வரிசையில் நிற்கும் உள்நாட்டு அகதியாய், அனுராதபுரத்தில் வன்புணர்வு முடிந்தும் வக்கிரம் தீராத சிங்கள ராணுவத்தினரால் மார்பு அறுக்கப்படும் தமிழச்சியாய், ராணுவ உயர் அதிகாரிகளின் குடும்பத்தில் நோயுற்றவர்களுக்காய் உயிரோடு உடல் பிளக்கப்பட்டு சிறுநீரகம், ஈரல், கண்கள் அகற்றப்படும் இளைஞனாய் -சுருங்கக் கூறின் ஈழத்தமிழனாய் இருந்து பாருங்கள் உணர்வில்.
கடந்த வியாழன் பெங்களூரு விலிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு. அழைத்தவரது பெயர் அமிதாப். இளைஞர். முதலில் என்னோடு பேசியதோ அவரது அம்மா கிருஷ்ணவேணி. அய்யங்கார் குடும்பம். நக்கீரன் வாசகர்களாம். 1991 டிசம்பரில் காவிரி நீர் தமிழகத்திற்குத் தரக்கூடாதென கன்னடர்கள் நடத்திய கலவரத் தில் ஒரே ஒரு நாள் அகதிகளான அனுபவம் கிடைக்கப்பெற்றவர்கள். கிருஷ்ணவேணி அம்மா என்னிடம் கூறினார்: ""ஒரே ஒருநாள் வீட்டிலிருந்து விரட்டப்பட்டு அகதியான அனுபவத்தின் வலியை 18 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் என்னால் மறக்க முடியவில்லை...'' என்றார். தனது மகன் அமிதாப் ஈழத்தமிழ் மக்கள் மீதான இன அழித்தலை உலக நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல தயாராய் இருப்பதாகக் கூறினார். இதற்குப் பெயர்தான் ஒபாமா குறிப்பிடும் "ஊம்ல்ஹற்ட்ஹ்'.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சியிருக்கிறவர்கள் 15,000-லிருந்து 20,000 பேர் வரை என இலங்கை அரசு சொல் கிறது. ஆனால் களத்தில் மக்களிடையே பணி யாற்றிவரும் அருட்திரு. எட்மன்ட் ரெஜினால்ட் நமக்குத் தருகிற தகவலின்படி இன்னும் அங்கு உணவு மருந்து, குடிநீர் இன்றி வாழும் தமிழர்கள் 1,65,000 பேர். இவர்களை குறிவைத்து கடந்த ஞாயிறு இரவு தொடங்கி பத்துமணிநேரம் தொடர் எறிகணை வீச்சு நடத்தியது சிங்கள ராணுவம். பி.பி.சி. தகவல்படி 378 தமிழர் பலி. இவர்களில் நூற்றுக்கும் மேலானோர் குழந்தைகள், 1112 பேர் படுகாயம். ஆனால் உண்மையான எண்ணிக்கை, கொல்லப்பட்டது சுமார் 1700 பேர், படுகாயமுற்றதும் அதே எண்ணிக்கையில். நமது கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் நடந்த இக்கொடுமையை ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, பிரித்தானிய நாடுகள் ""இரத்தக் குளியல்'' எனக் குறிப்பிட்டு கண்டித்தன.
இரத்தக் குளியல் கொடுமைதான் ஒபாமா அவர்களின் கோபத்தை கடுமையாக்கியதாகக் கூறப்படுகிறது. இலங்கை அரசின் அனுமதி இல்லாம லேயே உயிர்வாடி நிற்கும் 1,65,000 மக்களுக்கு உணவு மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கத் தயாராகும்படி அமெரிக்கா வின் பசிபிக் பெருங்கடல் கப்பற்படை பிரிவுக்கு அறிவுறுத்தல் வழங்கிய தாகவும் சொல்லப்படுகிறது. அமெரிக்கா களம் இறங்கினால் இன அழித்தல் திட்டத்தை முழுமையாக்க முடியா தென்பதை நன்கே அறிந்த ராஜபக்சே கும்பல் அமெரிக்க கப்பல்கள் புறப்படு முன்னரே இறுதி யுத்தத்தை கடந்த வெள்ளி அதிகாலை தொடங்கினார்கள். ரசாயனத் தாக்குதல் நடத்தி பல்லாயிரம் மக்களையும், போராளிகளையும் கொன்று குவித்தபின் முன் நகர்ந்திருக்கிறது ராணுவம். எங்கு நோக்கினும் பிணக்குவியல்... தாயின் கரம் பற்றியபடி கருகிக் கிடக்கும் பிஞ்சுகள்... 15 வயதுக்கு கீழான பிள்ளைகள் ஆயிரத்திற்கும் மேல்... என நெஞ்சை உலுக்கும் செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன.
களத்தின் உண்மையை எனக்குச் சொல்லி வந்த அருட் தந்தையர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. உயிரோடிருக்கிறார்களா, இல்லை ரசாயனக் குண்டுகளில் மூச்சடங்கிப் போனார்களாவென்பது தெரியவில்லை.
களத்தில்தான் நிற்கிறாராம் வேலுப்பிள்ளை பிரபாகரன். தளபதிகள் பலமுறை கெஞ்சி மன்றாடியும் நகர மறுத்து வந்தாராம். தன்னை நம்பி நின்று களமாடும் போராளிகளோடு தானும் போரிட்டு மடிவதென்பதில் உறுதியாக இருந்ததாய் சொல் கிறார்கள். ஆனால் வெள்ளி மதியம் தளபதிகளே இணைந்து முடிவெடுத்து தலைவருக்கு உத்தர விட்டிருக்கிறார்கள். ""விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால் நீங்கள் உயிரோடிருப்பது முக்கியம். போர்க்களத்தைவிட்டு உங்களை அப்புறப்படுத்துவது எங்கள் முடிவு. பெரும்பான்மை முடிவை நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும்'' என்றிருக்கிறார்கள். ஒருகணம் அம்முடிவை பிரபாகரன் ஏற்றுக்கொள்ள ஆபத்தானதோர் ஊடறுப்புத் தாக்குதலை மூத்த தளபதி சொர்ணம் தலைமையில் நடத்தி பிரபாகரன் அவர் களை பாதுகாப்பாக முற்றுகையிலிருந்து வெளியே கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது துரதிருஷ்ட வசமாய் தளபதி சொர்ணம் வீரமரணம் தழுவியதாய் சொல்லப்படுகிறது. ""களத்தில் போராளிகளுடன் நான் நிற்கவேண்டுமென்பது இயற்கை யின் விருப்பம்'' என்றிருக்கிறார் பிரபாகரன்.
தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் நாங்கள் நடத்திய ஆய்வின்படி இன்றைய தி.மு.க. கூட்டணி நிச்சயம் 36 தொகுதிகளை வென்றிருக்கவேண்டும். ரூபாய்க்கு கிலோ அரிசி உள்ளிட்ட பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்கள் ஏழை-எளிய மக்களிடையே உறுதியான ஆதரவை உருவாக்கியிருந்தது. காங் கிரஸ் வேட்பாளர்கள் தமிழகத்தில் சந் தித்துள்ள பின்னடைவுக்கும் ஈழத்தமி ழர் பிரச்சனைக்கும் தொடர்பு உண்டு.
ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஏப்ரல் இறுதியில் சேகரித்த தரவு விபரங்களை (உஹற்ஹ). துல்லியமாக ஆய்வு செய்தேன். தி.மு.க. வேட்பாளர்தான் முன்னிலையில் இருந்தார். முன் சொன்னதுபோல நல வாழ்வுத் திட்டங்களுக்காய் மட்டுமே 16 சதம் பேர் வாக்களிப்பதாகக் கூறியிருந்தனர். ஆனால் தி.மு.க. உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் நான்கு சதம்பேர் கட்சி வேட்பாளருக்கு எதிராய் வாக்களிப்ப தாகக் கூறியிருந்தனர். காரணம் ஈழத்தமிழர் பிரச்சனை. ஈழத்தமிழர் பிரச்சனையை கண்டுகொள்ளாமலே கூட தேர்தல்களை தி.மு.க. வென்று விடலாம். ஆனால் மொழி, இன மற்றும் சமூக நீதி உணர்வுகளில் புடமிடப்பட்ட தன் கழகக் கண்மணிகளை, விதை நெல்களை படிப்படியாக இழக்கும். நாட்பட, ஓர் இயக்கமாய் மிகவும் பலவீனப்படும்.
அசாத்திய உழைப்பும், தியாகங் களும், அளப்பரிய பங்களிப்புகளால் வளர்ந்து விரிந்த கலைஞரின் பொது வாழ்வு உச்சம் தொடும் நாட்கள் இவை. "தமிழினத் தலை வர்' என்பதுதான் அவரது தகை மைக்கு உரிய தகுதி.
தேர்தல் காலத்தில் நிகழ்ந்த மகிழ்ச்சியான மாற்றம் செல்வி.ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்காய் எழுப்பிய குரல். ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்கள் அவரிடம் கொடுத்த தமிழ் அகதி மக்களின், குறிப்பாக பெண்கள் படும் அவலத்தின் ஒளிப்பதிவினை பார்த்து செல்வி.ஜெயலலிதா கண்கலங்கியதாக அவருக்கு நெருக்கமான வர்கள் கூறியுள்ளார்கள். அவரது குரல் மேலும் கூர்மைபெறுமெனில் தமிழ் மக்களது வரலாற்று நினைவுகளில் நீங்காத இடம் பெறுவார்.
ஈழத்தமிழ் மக்களது முதல் எதிரி ராஜபக்சே கும்பல் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பேரினவாதம், இரண்டாவது எதிரி அப்பேரினவாதத்திற்கு துணை நிற்கும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை, மூன்றாவது எதிரி இந்தியப்பெருங்கடல் மேலாதிக்கத்தை நோக்கி அரசியல் நடத்தும் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள். நான்காவது எதிரி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கருத்துருவாக்கும் இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள். அதற்குப் பின்னர்தான் தமிழகத்தின் அரசியல் வாதிகள்.
ஒருவரையொருவர் விமர்சித்து, வசைபாடி, அன்றாட அறிக்கைப்போர் நடத்தி ஈழத்தமிழ் மக்களின் துயரத்தையும் வலிகளையும் மேலும் ரணப்படுத்தாதீர்கள் என்பதுதான் நமது மன்றாட்டு. தமிழ் தேசியத் தலைவர் ஒருவரைச் சுற்றி இலங்கை ராணுவப் புலனாய்வுத்துறை அவருக்குத் தெரியாமலே ஊடுருவியிருப்பதை நான் அறிவேன்.
ஜெகத் கஸ்பர் nakkheeran

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக