
பெற்றோருக்கு தெரியாமல் மோட்டர் சைக்கிளை எடுத்துச் சென்ற மாணவன் விபத்தில் சிக்கினான். மூளை செயலிழந்ததால் உயிரை காப்பாற்ற முடியாத நிலை. துக்கத்தை அடக்கிக் கொண்டு, அவனது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர் பெற்றோர். மின்னல் வேகத்தில் அந்த மாணவனின் இதயத்தை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார் சென்னை போலீஸ் டிரைவர். காத்திருந்த டாக்டர்கள் குழு அபார வேகத்தில் செயல்பட்டு, அந்த இதயத்தை ஒரு நோயாளிக்கு பொருத்தி அவருக்கு மறுவாழ்வு அளித்தது. - திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவங்கள், பயங்கரவாதிகளின் குண்டுகள் எத்தனை உயிர்களை பறித்தாலும் மனிதாபிமானத்துக்கு மரணம் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியது. நெஞ்சை நெகிழ வைக்கும் அந்த சம்பவம் பற்றிய கீழே...
திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரில் வசிப்பவர் டாக்டர் அசோகன் (44). இவரது மனைவி டாக்டர் புஷ்பாஞ்சலி(40). திருக்கழுக்குன்றம் அடிவார வீதியில் 'மனீஸ் கிளினிக்' என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். இவர்களின் மூத்த மகன் தேந்திரன் (16). அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சனிக்கிழமை தேந்திரன் தன் தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு, அதே பகுதியில் வசிக்கும் நண்பன் மோகனை பார்க்க சென்றான். பார்த்து பேசிவிட்டு, வழியில் கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். திருக்குமரன் நகரில் ஒரு மீன்பாடி வண்டி கட்டுமான பொருட்களுடன் முன்னால் சென்று கொண்டிருந்தது. அதை ஓவர்டேக் செய்து வலதுபுறம் வீடு இருந்த திசையில் திரும்ப தேந்திரன் முயன்றபோது, மீன்பாடி வண்டியில் நீட்டிக் கொண்டிருந்த கம்பி இடித்துவிட்டது. வண்டியில் மோதி கீழே விழுந்தான். தலையில் பலத்த அடி பட்டதால் ரத்தம் கொட்டியது. உடனே மயங்கி விட்டான்.
அந்த ஏரியாவில் உள்ளவர்களுக்கு தேந்திரனை நன்றாக தெரியும். உடனே அவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். அவனது அப்பாவுக்கும் தகவல் கொடுத்தனர். அவர் மருத்துவமனைக்கு விரைந்தார். தேந்திரனுக்கு நினைவு திரும்பவில்லை. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், தலையில் அடிபட்ட அதிர்ச்சியில் தேந்திரனின் மூளை செயல் இழந்து விட்டதாகவும், என்னதான் சிகிச்சை அளித்தாலும் மூளை மீண்டும் செயல்பட வாய்ப்பே இல்லை என்றும் கூறினர். தேந்திரனின் பெற்றோர் இருவருமே டாக்டர்கள் என்பதால் விஷயத்தை புரிந்துகொண்டனர்.
இனி உயிர் பிழைக்க முடியாத தங்கள் மகனின் உடல், மற்றவர்களுக்காவது உயிர் கொடுக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தனர். மகனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க விரும்புவதாக அப்போலோ டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
நேற்று காலை தேந்திரனின் கண்கள், இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. கண்கள் சங்கர நேத்ராலயா கண் மருத் துவமனைக்கு அனுப்பப்பட்டன. சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஜெ.ஜெ.நகரில் உள்ள செரியன் ஹார்ட் பவுண்டேசனில் சிகிச்சை பெறும் ஒரு சிறுவனுக்கு பொருத்துவதற்காக தேந்திரனின் இதயத்தை கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஆபரேஷன் முடிந்த 20 முதல் 30 நிமிடங்களுக்குள் இதயம் இன்னொருவருக்கு பொருத்தப்பட வேண்டும். ஆனால், 20 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டும். சென்னை நகர டிராபிக் நெரிசலில் இது சாத்தியமே இல்லை. எனவே போலீஸ் உதவ முடியுமா என்று விசாரித்தனர். அடிஷனல் கமிஷனர் (டிராபிக்) சுனில்குமார் உடனே உதவ முன்வந்தார். ஆம்புலன்ஸ் ரெடி பண்ணுமாறும், அதை நெரிசலில் சிக்காமல் அழைத்துச் செல்ல ஹ¨ண்டாய் போலீஸ் காரை ஒரு ஏ.சி.யுடன் அனுப்பி வைப்பதாகவும் சுனில் கூறியுள்ளார். வழி நெடுக உள்ள அனைத்து சிக்னல்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
ஆபரேஷன் முடிந்ததும் டாக்டர்கள் தேந்திரனின் இதயத்தை சிறிய ஐஸ் பெட்டியில் எடுத்துக் கொண்டு 2.50 மணிக்கு வெளியில் வந்தனர். அங்கே நின்றிருந்த அவனது தந்தை ஐஸ் பெட்டியை பார்த்ததும் துக்கம் தாங்காமல் துணியால் வாயை மூடிக் கொண்டார். ஆம்புலன்ஸ் ரெடியாக நின்றிருந்தது. அதை கவனிக்காத டாக்டர், அதற்கு முன் நின்றிருந்த போலீஸ் காரின் கதவை திறந்து ஏறி அமர்ந்து, ‘வேகமா போங்க..!’ என்று சொல்ல, உள்ளே இருந்த உதவி கமிஷனர் மனோகரன் உடனே சுதாரித்துக் கொண்டு, டிரைவர் மோகனுக்கு ஜாடை காட்ட, உடனே கார் மின்னல் வேகத்தில் பறந்தது.
ஜெ.ஜெ.நகர் செரியன் மருத்துவமனையில் டாக்டர்கள் குழு ரெடியாக இருந்தது. ஒன்பது வயது சிறுவன் மாற்று இதயம் பொருத்துவதற்காக ஆபரேஷன் தியேட்டரில் காத்திருந்தான். போலீஸ் கார் வந்ததும், அப்போலோ டாக்டர் ஐஸ் பெட்டியுடன் உள்ளே ஓடிவந்தார். 6 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. தேந்திரனின் இதயத்தை டாக்டர்கள் குழு வெற்றிகரமாக 9 வயது சிறுவனுக்கு பொருத்தியது
.‘தேந்திரன்’ என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? - ‘
இதயத்தை கொள்ளை கொள்பவன்’
‘10 நிமிடத்தில் பறந்தேன்’அந்த பரபரப்பான நிமிடங்கள் பற்றி கார் டிரைவரும் போலீஸ்காரருமான மோகன்
நானும் உதவி கமிஷனர் மனோகரனும் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிச் செல்ல தயாராக இருந்தோம். எதிர்பாராமல் டாக்டர்கள் எங்கள் காரில் ஏறிவிட்டனர். ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதால் ஏசி ஆட்சேபிக்கவில்லை. ஒருவருக்கு உயிர் கொடுக்க போகிறோம் என்ற பதற்றம் அந்த நிமிடத்தில் தாக்கியது. காரை வேகமாக ஓட்டினேன். கிட்டத்தட்ட 120 கி.மீ வேகத்தில் கார் பறந்தது.
அண்ணாசாலை, வி.என்.சாலை, பர்கிட் ரோட்டில் ஒரு வழிப்பாதையாக இருந்தாலும், போலீசார் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்ததாலும் எதிர் திசை வழியாக, மேட்லிரோடு, தி.நகர் பஸ் நிலையம், புதிய மேம்பாலம், லயோலா கல்லூரி, அண்ணா வளைவு, அண்ணாநகர் ரவுண்டானா வழியாக ஆஸ்பிடலை அடைந்த பிறகுதான் வாட்சை பார்த்தேன். 10 நிமிடம்தான் ஆகியிருந்தது. டாக்டர் நன்றி சொல்லிக் கொண்டே மருத்துமனைக்குள் ஓடினார். அதன் பிறகுதான் எனக்கு நிம்மதி.
இதுவரை இவ்வளவு வேகத்தில் கார் ஓட்டியதே கிடையாது. அருகில் இருந்த உதவி கமிஷனர் மைக் மூலம் போக்குவரத்து போலீசுக்கு தகவல் கொடுத்துக் கொண்டே வந்ததால், ரோடு கிளியராக இருந்தது. இது என்னால் மறக்கவே முடியாத நாள்’’
படம்:
படம் 1: விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்த மாணவன் தேந்திரன்.
படம் 2: மகனை பறிகொடுத்த டாக்டர் தம்பதி.
படம் 3: ஐஸ் பெட்டியில் இதயத்தை வைத்து அவசரமாக எடுத்துச் செல்கின்றனர்.
படம் 4: ஆம்புலன்ஸ் நிற்பதை கவனிக்காமல், போலீஸ் காரில் இதயத்துடன் புறப்படுகின்றனர்.
( நன்றி: தினகரன் )
"ஹிதேந்திரனின் பெற்றோர் செய்த தியாகத்துக்கு ஈடு இணையே கிடையாது" -
அமைச்சர் ஸ்டாலின்