23 செப்டம்பர், 2008

அவர்கள் அப்படித்தான்

முதியோர் இல்லங்கள்
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?
உண்டு. எங்கே?
முதியோர் இல்லங்களில்.

இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில் குறைந்தபட்சம் முதியவர் ஒருவராவது இருப்பார்கள். பேரன்களால் பெருசு என்றும், மருமகளால் கெழம் என்றும், மகனின் பார்வையில் எரிச்சலை ஏற்படுத்தும் காட்சிப்பொருளாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கும் முதியவர்களைப் பற்றிதான் இந்த வலைப்பதிவு. வாழவைத்துக்கொண்டிருக்கிறேன் என்ற தலைக்கணத்தில் சில குடும்பத்தில் அவர்களின் உணர்வுகளை பெற்ற பிள்ளைகளே சாகடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு, கணவன் ஒருவன் தனக்கென்று வந்தபின் தனது ஆசைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வீட்டில் உள்ள பெரியவர்கள் (மாமனார், மாமியார்) ஒரு தடை என்றும் தனிப்பட்ட ஆசாபாசங்கள் மட்டுமே முக்கியம் என்று சில பெண்கள் நினைப்பதே எல்லா பிரச்சினைக்கும் முக்கிய காரணம்.

மாமியார், மாமனார், மருமகள் இடையே காரணமற்ற கருத்துவேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம். இதுயாவும் இயற்கையே. ஒத்த கருத்துகொண்டவர்களை அருகில் இருந்து பார்ப்பது அபூர்வம் தான். அதனால் கருத்துவேறுபாடுகள் பல இருந்தாலும், அலுவலகப் பிரச்சினைகளை சமாளித்துவிட்டு வீட்டிற்கு வருகிற ஆணிடம் புதியதாக ஒரு பிரச்சினையை காதில் ஓதி விடுவதே பிரச்சினையின் ஆரம்பம். கணவனிடம் சொன்னதை தனது தாய் வீட்டிற்கும் ஃபோன் செய்து சொல்லி அழுவது பிரச்சினையின் உச்சகட்டம். இதுபோன்ற சிறு சிறு பிரச்சினைகள் ஒன்றாகி மனவருத்தம், கருத்துவேறுபாடு, எதிரியாக பார்க்கும் மனோபாவம், போன்ற பல காரணங்களால் வீட்டிலுள்ள முதியவர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

குடும்பம் என்றால் பிரச்சினை இருப்பது இயற்கை. அதனால் மற்றவர்களுக்காக நம்மை தியாகம் செய்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. (தியாகியாக யாராவது இன்றைய காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி) ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்களின் மனது புண்படும்படி நடந்துக்கொள்வது, அவர்களை சுமையாகவே நினைப்பது, இருப்பதற்கு இல்லாமல் இருக்கலாம் என்று பேசி அவர்களின் மனதை காயப்படுத்துவது போன்ற இழிவான செயல்களுக்குப்பதில் அவர்கள் அப்படித்தான் அதனால் நாம் கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு எண்ணத்தை மருமகள் நினைக்கும்போது அங்கு பிரச்சினை ஏற்படவோ அவர்களை எதிராக பார்க்கும் மனநிலை ஏற்படவோ ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்காது. ஆக இருக்கும் வாழ்க்கையை இன்பமாக கழிப்பதற்கு நம் மனதை நாமே பக்குவப்படுத்திக்கொள்வதில் தவறேதும் இல்லை.

வீட்டிலுள்ள முதியவர்களிடமும் (மாமியார், மாமானாரிடம்) தவறுகள் இருக்கலாம். எரிச்சலூட்டும்படியே அவர்கள் நடந்துக்கொள்ளலாம்.

இருப்பினும் வேகமாக சென்றுகொண்டிருக்கும் இன்றைய நவீன உலகத்தில் உணவு தயாராகவில்லையா, பாஸ்ட் ஃபுட்க்கு சென்றுவிடலாம். குழந்தையை கவனிக்க முடியவில்லையா, க்ரீச்சில் (மழலையர் காப்பகம்) சேர்த்துவிடலாம். வீட்டிலுள்ள பெரியவர்களால் தொல்லையா,அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று எண்ணி வேகமாக செல்லும் நவீன வாழ்கை முறைக்கு ஏற்றதுபோல நம் மனதையும் மாற்றிக்கொள்வது தவறு. காரணம் பெற்றவர்களை, நம்மைப் படிக்கவைப்பதற்காக முன்றொரு காலத்தில் உழைத்தவர்களை, உணவை கொடுத்து நம்மை ஆளாக்கியவர்களுக்காக, நோய் வந்தால் செலவு செய்து ஆரோக்கியமாக்கியவர்களை ஒரு சுமையாக நினைப்பவர்கள் நிச்சயமாக துரதிஷ்டமானவர்களே.

காரணம், சொத்துக்காக பெற்றோர்களை வீட்டில் வைத்துக்கொள்கிற சில ஆண்களும், முதியவர்களின் குறைந்தபட்ச தேவையான வயிறார உணவைக்கூட சரியாக கொடுக்காத சில பெண்களும், இன்றைக்கும் சில குடும்பங்களில் இருக்கிறார்கள்.

எவ்வளவுதான் தம்பதிகள் படித்திருந்தாலும், கைநிறைய சம்பாதித்தாலும் முதியவர்களை சுமையாக நினைத்து முதியோர் இல்லங்களில் சேர்ப்பவர்களை ................................... (எதை வேண்டுமானாலும் போட்டு நிரப்பிக்கொள்ளலாம்)

சருகுகள் மீண்டும் மலராகாது...

ஆனால் மலர்கள் சருகுகள் ஆகாதோ?


Janaki Prabu, செப்டம்பர் 22, 2008 12:12:05 PM IST அன்று வெளியிட்டது #

கருத்துகள் இல்லை: